Friday, 24 March 2017

பெரும்பாணாற்றுப்படை 19

கழனிக் காட்சிகள் தொடர்ச்சி....

பாடல் வரிகள்:
களைஞர் தந்த கணைக்கால் நெய்தற்
கள் கமழ் புதுப்பூ முனையின் முட்சினை
முகை சூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்
கொடுங்கால் மாமலர் கொய்து கொண்டு அவண
பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டி
புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி
ஈருடை இருந்தலை ஆரச் சூடி
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல்
கருங்கை வினைஞர் காதல்அம் சிறாஅர்
பழஞ்சோற்று அமலை முனைஇ வரம்பில்
புதுவை வேய்ந்த கவி குடில் முன்றில்
அவல் எறி உலக்கைப் பாடு விறந்து அயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்
நீங்கா யாணர் வாங்கு கதிர்க் கழனி..................(213-228)

விளக்கம்:
[....வயல்களில் களை பறிப்பார் பறித்துப் போட்ட திரண்ட தாளையுடைய, தேன் மணம் வீசும் நெய்தல் மலரைச்சூடி வெறுப்பாராயின், முள்ளையுடைய கொம்பு, அரும்புகள் சூழந்த, இதழ்களையுடைய விரிந்த நீர் முள்ளியின் காம்புகளுடைய மலரைப் பறித்து, பசிய தண்டாங்கோரையை பல்லினால் கடித்து கிழித்த நாரால் கட்டிய இனிய மாலைகளை ஈருடைய கரிய தலையில் நிறையுமாறு சூட்டி, பொன்னின் மாற்றைக் காண உதவும் உறைக் கல்லைப் போன்று சம்பங் கோரையின் காயை உடைத்து அதிலுள்ள சுண்ணத்தைப் பூசிக் கொண்ட மார்பினையும், இரும்பை உருக்கி வார்த்தார் போன்ற சுருக்கமற்ற மெல்லிய தோல்களையுடைய வலிய கையால் வேலை செய்யும் தொழிலாளர்களின் அன்பிற்குரிய குழந்தைகள், பழைய சோற்றின் கட்டிகளை வெறுக்க, வரப்பின் ஓரத்தில் புதிய வைக்கோலால் வேயப்பட்ட அழகிய குடிசையின் முற்றத்தில், அவலை இடிக்கும் உலக்கைப் பாட்டொலியின் மிகுதியால், அதனருகில் வசிக்கும் வளைந்த மூக்கையுடைய கிளிகள் அஞ்சி நடுங்கி பறந்து செல்லும், குறையாத வருவாய் உடைய வளைந்த கதிர்களுடைய கழனியில்...] 

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
மருதநில மள்ளர்களான உழவர்கள் நெல் விளையும் கழனியில் பயிருக்கு ஊறு விளைவிக்கும் களைகளை பறித்து எறிகின்றனர். அதனால், அவர்கள் 'களைஞர்கள்' என்ற சிறப்புப் பெயரையும் பெறுகின்றனர். அவர்கள் பறித்துப் போட்ட களைகளிலுள்ள மலர்களை அவர்களின் குழந்தைகள் சூடி மகிழும் காட்சி இங்கு விளக்கப் பட்டுள்ளது. மேலும், அருவடைக் காலங்களில் வயல்களின் வரப்பு ஓரத்தில் தற்காலிகமாக குடிசை அமைக்கப்படும் விசயமும் 'புதிய வைக்கோலால் வேய்ந்து அமைக்கப்பட்ட அழகிய குடிசை' என்ற விளக்கத்தின் மூலம் தெளிவாகிறது. அந்தக் குடிசையில் அருவடைத் தொழில் செய்வதற்காக வீட்டிலிருந்து கொண்டு வந்து வைக்கப்பட்ட பழைய சோற்றுக்கட்டிகளை அவர்களின் சிறார்கள் வெறுத்தலின் பொருட்டு, அவர்களுக்குக் கொடுப்பதற்காக குடிசையின் முற்றத்தில் அரிசி அவல் இடிக்கும் காட்சியும், அவல் இடிக்கும் பள்ளிகளின் உலக்கைப் பாட்டொலி கேட்டு கிளிகள் அஞ்சி நடுங்கி ஓடும் அழகிய காட்சியின் விளக்கமும் தெளிவாக்கப்படுகிறது.