Wednesday, 22 February 2017

பெரும்பாணாற்றுப்படை 18

மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள்

பாடல் வரிகள்:
….. ……….        ………    மென்தோல்
மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்று அன்ன
கவைத்தாள் அலவன் அளற்று அளை சிதைய
பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின்
கார் ஏறு பொருத கண்அகன் செறுவின்
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்...........(206-212)

விளக்கம்:
[...மெல்லிய தோலினாலான துருத்தியை காலால் மிதித்து ஊதும் கொல்லனின் உடைந்த கொறடு போன்ற பிளவுடை கால்களுடைய நண்டின் சேற்றில் உண்டாகிய வளை கெடும்படி பசிய கோரைப் புல்லைக் குத்தி எடுத்த மண் ஒட்டிய கொம்புகளுடைய கருமையான காளைகள் தமக்குள் போரிடும் அகன்ற இடத்தையுடைய வயலில், உழவில் உழுபடாத நிலத்தைக் காலால் மிதித்து சமமாக்கி சரிபடுத்தும் உழவர்கள், முடியாக வீசிய நாற்றினை நட்ட நீர் வளமிக்க வயலில்...]

இது மருதநில மள்ளர்களின்(பள்ளர்களின்) நன்செய் நில உழவின் காட்சிகள்.

Saturday, 11 February 2017

பெரும்பாணாற்றுப்படை 17

மருத நிலத்தைச் சேர்ந்த முல்லை நிலம்(புன்செய் நிலம்)

பாடல் வரிகள்:
……….               ……. ஞாங்கர்க்
குடி நிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
வன்புலம் இறந்த பின்றை ..............(196-206)

விளக்கம்:
[..முல்லை நிலக் குடியிருப்பிற்கு அப்பால், வீட்டில் நிறைந்த உணவுடைய செம்மையான உழவு செய்கின்ற உழவர்கள், உழவில் பழக்கிய எருதுகளை ஏரில் பூட்டி யானையின் வாயை ஒத்த கலப்பையை கொழு நிலத்தில் அழுந்துமாறு பல சால் உழுது பயிருட்டு மீண்டும் உழுது களையெடுத்த புன்செய் நிலம், அறுவடை காலத்தின் போது அவர்கள் எழுப்பும் சத்தத்தால் அஞ்சி நடுங்கும் வெண்மையான கடம்ப மலர்களை ஒத்த வளரும் இளைய குஞ்சுகளைக் கூட்டிக் கொண்டு, சிறிய கால்களையும், கரிய கழுத்துகளையும் கொண்ட காடைப் பறவைகள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்லும் மருத நிலத்தை சார்ந்த புன்செய் நிலத்தை கடந்து போன் பின்பு..]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
வீட்டில் நிறைந்த உணவுடைய ஏர் பூட்டி கொழு நிலத்தில் அழுந்துமாறு செஞ்சால் உழவு செய்கின்ற உழவர்கள் என்ற குறிப்பு மருதநில மள்ளர்களைக் குறிக்கிறது. அவர்கள் இங்கே பயிர் செய்கின்ற நிலம் மருதம் சார்ந்த முல்லை நிலம் அதாவது மானாவரிப் பயிர் செய்யும் புன்செய் நிலம். மருதநில மள்ளர்கள் புன்செய் நில பயிர் செய்யும் வழக்கமும் அவர்களிடத்தில் உள்ளது. அதைப் பற்றிய விளக்கம்தான் இந்தப் பகுதி.

Friday, 10 February 2017

பெரும்பாணாற்றுப்படை 16

முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன

பாடல் வரிகள்:
……….. முள் உடுத்து
எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்
களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்
பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேய்ந்த கவின் குடிச் சீறூர்
நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன
குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று
இன்சுவை மூரல் பெறுகுவிர்................(184-196)

விளக்கம்:
[.....முள் நிரம்பிய காடுகள் சூழ வளர்ந்த தொழுக்களுடைய நிலம். அதில் பெண் யானை நின்றாற் போன்று வரகு கொட்டி வைக்கும் குதிர்களுடைய முற்றத்தில்,யானையின் பாதத்தை ஒத்த வரகு திரிகை நட்டு நிற்கும் பந்தர், சிறிய சகடத்தின் உருளையுடன் கலப்பையை சார்த்தி வைக்கப்பட்டதால் தோய்ந்து போன நெடிய சுவர்களையும், மழைகாலத்தில் வானத்தில் பரவிய மேகங்களைப் போன்று புகை தோய்ந்த கொட்டிலையும், வரகு வைக்கோலால் வேயப்பட்ட அழகிய குடியிருப்புகளையும் உடைய அவ்வூர்களில், நீண்ட கொத்தையுடைய பூளையின் மலரைப் போன்ற குறுகிய தாளையுடைய வரகின் சிறிய பருக்கை சோற்றை, கொத்துக்கொத்தான வேங்கைப் பூவைக் கண்டது போன்ற அவரை விதையின் பருப்பை மிக இட்டுப் பயில்வதான இனிய சுவையுடைய முரலோடு பெறுவீர்!..]

பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
இந்தப் பாடல் வரிகளால் முல்லை நிலம் சார்ந்த பயிரை விளைவித்து வாழும் உழுதுண்டு வாழும் மக்களின் வாழ்நிலை விளக்கப்படுகிறது. இவர்களின் ஊர் காடுகள் வேலியாக அமைந்த ஊர். பயிருடும் பயிரானது வரகு, வரகு சேமிக்க உதவும் குதிர், வரகு திரிக்க உதவும் திரிகை, வரகு வைக்கோலால் வேயப்பட்ட குடிசை மற்றும் அவரைப் பருப்புக்கூட்டுடன் பெறும் வரகுச் சோறு ஆகிய இவை அனைத்தும் புஞ்சைப் பயிரான வரகை விளைவித்து வாழும் மக்களின் வாழ்நிலையை தெளிவுபடுத்துவதாக உள்ளது. இது முல்லை நிலம் சார்ந்த உழுதுண்ணும் மக்களின் வாழ்வு.
   

Wednesday, 8 February 2017

பெரும்பாணாற்றுப்படை 15

முல்லை நில இடையரின் இயல்பு

பாடல் வரிகள்:
தொடுதோல் மரீஇய வடு நாள் நோன்அடி
விழுத்தண்டு ஊன்றிய மழுத்தின் வன் கை
உறிக்கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்
மேம்பால் உரைத்த ஓரி ஓங்கு மிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
அம் நுண் அவிர் புகை கமழ கைம்முயன்று
ஞெலி கோல் கொண்ட பெருவிறல் நெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன் தீம் பாலை முனையின் குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்காற் பறவை கிளை செத்து ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலம் போகி ......................(169-184)

விளக்கம்:
[...செருப்பு அணிந்ததால் உண்டான வலிய பாதங்களில் வடுக்களையும், மாடுகளை அடிக்க உதவும் தடியைத் தாங்கிய, கோடாரியால் ஆன தழும்புடைய வலிய கைகளையும், இரண்டு தலைகளிலும் உறியையுடைய காவடிகள் சுமந்ததால் உண்டான தழும்புகள் மிக்க மயிருள்ள தோள்கட்டு, மற்ற பாலை விட மேம்பட்ட பசும்பால் தடவிய மயிர், உயர்ந்த உச்சிகளையுடைய கிளைகளிலும், கொடிகளிலும் உள்ளதுமான காட்டில் பல மலர்களைக் கலந்து கட்டிய கலம்ப மாலை, ஒற்றை உடை உடுத்திய பால் சோற்றை உண்ணும் இடையன். கன்றுகளை விரும்பும் ஆநிரைகளோடு காட்டில் தங்கி, அழகிய நுட்பமாய் விளங்கும் புகை கமழுமாறு கையால் கடைந்து படுத்த கோலில் உண்டாக்கிய பெரிய வெற்றியுடைய கடைக் கொள்ளியால், துளையிடப்பட்ட கரிய துளையுடைய குழலால் எழுப்பின, இனிய பாலை என்ற பண்ணைத் தான்வெறுப்பின், குமிழத்தின் உட்பொய்யான கொம்பிடத்தில் வளைத்துக் கட்டிய மரல் கயிராகிய நரம்புடைய வில்லாகிய யாழ் இசைக்கின்ற விரலால் எறிந்து எழுப்பிய குறிஞ்சி என்னும் பண்ணைப் பல கால்களையுடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாய் எண்ணி செவி சாய்த்துக் கேட்கின்ற, புல் நிறைந்த அகன்ற நிலத்தைக் கடந்து சென்று...]

இந்தப் பாடல் வரிகள் மூலம் ஆநிரை பராமரித்து வாழ்கின்ற முல்லை நில இடையர் குல ஆடவரின் இயல்புகள் தெளிவுபடுத்தப்படுகின்றன. இதில் புலம் என்ற சொல்லின் விளக்கமாக 'நிலம்' என்ற அர்த்தம் தெளிவாக்கப்பட்டுள்ளது.