Wednesday, 8 February 2017

பெரும்பாணாற்றுப்படை 15

முல்லை நில இடையரின் இயல்பு

பாடல் வரிகள்:
தொடுதோல் மரீஇய வடு நாள் நோன்அடி
விழுத்தண்டு ஊன்றிய மழுத்தின் வன் கை
உறிக்கா ஊர்ந்த மறுப்படு மயிர்ச்சுவல்
மேம்பால் உரைத்த ஓரி ஓங்கு மிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன்
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
அம் நுண் அவிர் புகை கமழ கைம்முயன்று
ஞெலி கோல் கொண்ட பெருவிறல் நெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன் தீம் பாலை முனையின் குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்காற் பறவை கிளை செத்து ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலம் போகி ......................(169-184)

விளக்கம்:
[...செருப்பு அணிந்ததால் உண்டான வலிய பாதங்களில் வடுக்களையும், மாடுகளை அடிக்க உதவும் தடியைத் தாங்கிய, கோடாரியால் ஆன தழும்புடைய வலிய கைகளையும், இரண்டு தலைகளிலும் உறியையுடைய காவடிகள் சுமந்ததால் உண்டான தழும்புகள் மிக்க மயிருள்ள தோள்கட்டு, மற்ற பாலை விட மேம்பட்ட பசும்பால் தடவிய மயிர், உயர்ந்த உச்சிகளையுடைய கிளைகளிலும், கொடிகளிலும் உள்ளதுமான காட்டில் பல மலர்களைக் கலந்து கட்டிய கலம்ப மாலை, ஒற்றை உடை உடுத்திய பால் சோற்றை உண்ணும் இடையன். கன்றுகளை விரும்பும் ஆநிரைகளோடு காட்டில் தங்கி, அழகிய நுட்பமாய் விளங்கும் புகை கமழுமாறு கையால் கடைந்து படுத்த கோலில் உண்டாக்கிய பெரிய வெற்றியுடைய கடைக் கொள்ளியால், துளையிடப்பட்ட கரிய துளையுடைய குழலால் எழுப்பின, இனிய பாலை என்ற பண்ணைத் தான்வெறுப்பின், குமிழத்தின் உட்பொய்யான கொம்பிடத்தில் வளைத்துக் கட்டிய மரல் கயிராகிய நரம்புடைய வில்லாகிய யாழ் இசைக்கின்ற விரலால் எறிந்து எழுப்பிய குறிஞ்சி என்னும் பண்ணைப் பல கால்களையுடைய வண்டுகள் தம் சுற்றத்தின் ஓசையாய் எண்ணி செவி சாய்த்துக் கேட்கின்ற, புல் நிறைந்த அகன்ற நிலத்தைக் கடந்து சென்று...]

இந்தப் பாடல் வரிகள் மூலம் ஆநிரை பராமரித்து வாழ்கின்ற முல்லை நில இடையர் குல ஆடவரின் இயல்புகள் தெளிவுபடுத்தப்படுகின்றன. இதில் புலம் என்ற சொல்லின் விளக்கமாக 'நிலம்' என்ற அர்த்தம் தெளிவாக்கப்பட்டுள்ளது. 
 

No comments:

Post a Comment