Thursday, 12 January 2017

பெரும்பாணாற்றுப்படை 14

கோவலர் குடியிருப்பு மற்றும் அவர்கள் வாழ்க்கை முறை

பாடல் வரிகள்:
…        ……….  ……..       மறிய
குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பை
செற்றை வாயில் செறிகழி கதவின்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்
அதளோன் துஞ்சும் காப்பின் உதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்
நள் இருள் விடியல் புள் எழப் போகி
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வால்முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நல்மா மேனி
சிறுகுழை துயல்வரும் காதில் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்..........(147-168)

விளக்கம்:
[.......சிறிய ஆடுகள் நின்று உண்ணும் தழைகள் கட்டிய குறுகிய கால்களுடைய வீட்டினையும், சிறிய தூற்றையுடைய வாயிலையும், கட்டப்பட்ட கழிகளாலான கதவினையும், வரகு கற்றையால் வேயப்பட்ட கழிகளைத் தலையிடத்தேயுள்ள படுக்கையில் தோல் பாயில் முதியோன் துயில் கொள்ளும் காவலையும், ஆட்டின் நெடிய கயிறு கட்டிய குறிய முளையுடைய முற்றத்தினையும், வளைந்த முகத்தியுடைய செம்மறியாட்டுடனே வெள்ளாடும் கிடக்கும் சுற்று முள்ளாகிய வேலியையும் உடைய எரு மிகுதியாக உண்டாகின்ற முல்லை நில ஊர்.
விடியற்காலத்தில் பறவைகள் எழும்போதே எழுந்து, புலியின் முழக்கம் போன்ற முழக்கமுடைய மத்தினை அதன் கயிற்றை இழுத்து, குடைக்காளானின் வெண்மையான மொட்டுப் போன்ற குவிந்த மொட்டுக்கள் உடைய உறையால் தோய்ந்த இனிய தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்து, தயிர் புள்ளியாகத் தெளித்த வாயையுடைய மோர்ப்பானையை தலைசும்மாட்டின் மீது வைத்துக் கொண்டு, புதிய மோரை விற்கும், மாமை நிறம் கொண்ட மேனியையும், சிறிய அணிகலங்கள் அசைகின்ற காதுகளையும், மூங்கில் போன்ற தோளினையும், குறியதான நெறிப்பு உடைய கூந்தலையும் உடைய இடையர்குலப் பெண், மோர் விற்றதனால் உண்டான நெல் முதலியவற்றால் சுற்றத்தார் எல்லோரையும் உண்ணும்படி செய்து, பின்னர் தான் நெய்யை விற்கும் விலைக்குக் கட்டியான பொன்னை வாங்காமல் அவ்விலைக்கு எருமையையும், நல்ல பசுக்களையும் அவற்றின் கருவாகிய கன்றுகளையும் வாங்குவாள்.சீழ்க்கை அடிப்பதால் மடிந்த வாயையுடைய இடையர் வாழும் இத்தகைய இடையர் குடியிருப்பில் நீவிர் தங்கினால் பெரிய சுற்றமான நண்டின் சிறிய பார்ப்பைப் போன்ற பசிய அரிசியால சமைத்த சோற்றை பாலோடு பெருவீர்!...]

 இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
தமிழ்குடியாகிய தற்கால இடையர் குல மக்கள் பண்டைய காலத்தில் காடும், காடு சார்ந்த வாழ்வு வாழ்ந்த முல்லை நிலத்தவர். இவர்களின் தொழிலாக ஆடு,பசு போன்ற கால்நடை வளர்ப்பு. இவர்கள் பசுவின் பால் பொருளான 'ஆனந்தை' விற்று அதன் விலைக்கு(மருதநிலத்து மக்களிடம்) நெல்லைப் பெறுவர். அதன்மூலம் தாமும் உண்டு,தமது சுற்றதாரையும் உண்பித்து வாழ வைத்தனர் என்ற செய்தி பெறப்படுகிறது.

Tuesday, 10 January 2017

பெரும்பாணாற்றுப்படை 13

குறிஞ்சி நில மழவர்களின் இயல்பும் தொழிலும்
பாடல் வரிகள்:
யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் (135)
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட்டு உணவின் வாட்குடிப் பிறந்த
புலிப் போத்து அன்ன புல் அணற் காளை
செல் நாய் அன்ன கருவில் சுற்றமொடு
கேளா மன்னர் கடி புலம் புக்கு (140)
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்
சிலை நவில் எறுழ்த்தோள் ஓச்சி வலன் வளையூஉப் (145)
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை....................(134-147)

விளக்கம்:
[....ஆண் யானைத் தன்னைத் தாக்க வந்தாலும், பாம்பு தன் மீது ஊர்ந்து சென்றாலும், நீலநிற வானத்தில் கடும் இடி இடித்தாலும், கருக்கொண்ட மகளிர் அவற்றிற்கு அஞ்சாத மறம் பூண்ட வாழ்வு. தம் வலிமையால் கொள்ளை கொண்டு உணவினைக் கொள்ளும் வாள் தொழிலையுடைய குடியில் பிறந்த, ஆண் புலி போன்ற புல்லிய தாடியையுடைய இளையர் (மழவர்) தன் வேட்டையைத்தேடி செல்கின்ற நாயைப் போல, தம் குறிக்கோளை மேற்கொண்ட கொடிய விற்களைக் கொண்ட தமது சகாக்களுடன் தமது சொல் கேளாத பகை மன்னனின் காவல் அமைந்த நிலத்தில் (இரவில்) போய், விடியற் காலத்தே அவர்கள் பசுக்களைக் கவர்ந்து கொண்டு வந்து அவற்றைக் கள்ளுக்கு விலையாகப் பேசி விற்பர். பிறகு தமது இல்லத்தில் சமைத்த நெல்லால் ஆன தோப்பிக் கள்ளைக் குடித்து வளப்பமுடைய(?) மன்றத்திலே வலிய ஆட்டுக்கடாவை அறுத்துத் தின்று, தோலை மடித்து போர்த்திய வாயையுடைய மத்தளத்தை அவர்கள் நடுவில் வைத்து முழக்கி, வில் பயிற்சி பெற்ற வலிய தோளை உயர்த்தி வலப்பக்கத்தில் வளைந்து பகற் பொழுதில் மகிழ்ச்சியுடன் ஆடுகின்ற, சோம்பியிராத குடியிருப்புகள் உள்ள பொருதலையுடைய இடங்களைக் கடந்து...]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறியும் செய்தி:
இந்தப் பாடலில் இரு முக்கிய செய்திகளை நாம் தெளிவுபடுத்த வேண்டும். முதல் செய்தி 'புல் அணற் காளை' என்பது. இதைப்பற்றி விளக்கிய சிலர் அது மறவர் என்பதாகக் கொண்டு அதை தற்கால மறவர் இனத்தவர் என்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இது தவறான கருத்து. ஏனென்றால், மறவர் என்பது ஒரு இனத்தைக் குறிக்கும் மரபுப் பெயரல்ல. போர்க்களத்தில் கொடிய போர்முறை மேற்கொள்ளும் எவரும் 'மறவர்' என்ற பொதுப் பெயரால் சுட்டப்படுவர். அந்த வகையில் இந்த சொல் குறிப்பது ஒரு பண்பாகும். இங்கே அந்த மறவாழ்வை மேற்கொண்ட ஒரு குடி 'மழவர் குடி' ஆகும். இவர்களின் வாழ்வு பெரும்பாலும் குறிஞ்சி நில வாழ்வே. இவர்களே சங்க இலக்கியங்களில் 'மறவர் அல்லது இளையர்(இளையவர்)' என்றும் குறிப்பிடப்படுவர். சங்க இலக்கியத்தில் மழவர் என்பதே மறவர் என்று(மாற்றி மாற்றி) குறிக்கப்பட்ட ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இவர்களைக் குறிக்கும் ஒரு விளக்கம்தான் இந்த ' புல் அணற் காளை' என்பது. இவர்கள் வேந்தர்களுக்கு படைத்தளபதிகளாக, படைவீரர்களாக 'வேந்துவிடு தொழில்' மேற்கொண்டு நெல் விளைநிலம் பெறுவர்.
இரண்டாவதாக 'மல்லல் மன்றத்து' என்ற செய்தி. இந்த 'மல்லல்' என்ற வார்த்தையை உரையாசிரியர்கள் சம்பந்தமில்லாமல் இந்த இடத்தில் பயன்படுத்தியதை அதன் விளக்கத்தை வைத்தே நாம் புரிந்து கொள்ள முடியும். அதன்வழி நான் கொடுத்த விளக்கம் வளமுடைய மன்றம் அல்லது வளமுடைய மைதானம் அல்லது வளமுடைய திடல். ஏனென்றால், 'மல்லல் வளனே' என்று தொல்காப்பியர் தெளிவுபடுத்தியுள்ளார். இதை வைத்துத்தான் இந்த விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆனால், வளமுடைய மைதானம் அல்லது வளமுடைய திடல் என்பது விநோதமான விளக்கமாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே, 'மல்லல்' என்ற வார்த்தையில் தவறு இருப்பது தெளிவாகிறது. அதாவது, 'மல்லன்' என்ற வார்த்தை இங்கு 'மல்லல்' என்று மாற்றப்பட்டுள்ளது. மைதானத்தையோ அல்லது திடலையோ பேசும்போது அதற்கு முன்பு ஒருவரின் பெயரைச்சொல்லி 'அண்ணாவின் திடல்' அல்லது 'நேரு விளையாட்டு அரங்கம்' ( மன்றம் என்பது இங்கே அரங்கம்) என்றவாறு சொல்லப்படும். அதைவிடுத்து 'வளமையான திடல்' அல்லது 'வளமையான அரங்கம்' என்று சொல்வது விநோதமான, உண்மை விளக்கத்தை மறைப்பதாகவே உள்ளது. அந்தவகையில், இந்த இடத்தில் நிச்சயமாக 'மல்லல் மன்றத்து' என்பது அந்த நாட்டின் மன்னனைக் குறிக்கும் முறையில் பயன்படுத்தப்பட்ட 'மல்லன் மன்றத்து' என்பதே சரியான விளக்கமாகும். எனவே, இங்கு 'மல்லல்' என்று உள்நோக்கத்தோடு வார்த்தையை மாற்றியுள்ளனர். இதேபோன்று சங்க இலக்கியத்தில், இந்த 'மல்லன்' என்ற சொல் வரும் சில இடங்களில் இவ்வாறு உரையாசிரியர்களால் மாற்றப்பட்டு தவறான பொருள் கூறப்பட்டுள்ளது. இதை பின்பு பார்க்கலாம்.

பெரும்பாணாற்றுப்படை 12

எயினரது அரணின் அமைப்பு
பாடல் வரிகள்:
…… ……….. ………. பருந்து பட
ஒன்னாத் தெவ்வர் நடுங்க ஓச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு
கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்
தொடர் நாய் யாத்த துன்அருங் கடிநகர்
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செந்நிலை
நெடு நுதி வயக்கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன
சுவல் விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்தது வயின் தொறும் பெருகுவிர்..........(117-133)

விளக்கம்:
[....ஊனைத் தின்பதற்குப் பருந்துகள் வந்து தங்குமாறு பொருந்தாத பகைவரைக் குத்திக் கூரிய முனை மழுங்கிய புலால் நாறும் வாயையுடைய வேலினை, தெளிந்த ஓசையுள்ள மணி கட்டிய பலகையுடன் வரிசைப்பட வைத்து, தலையில் முடிந்த நாணையுடைய வில்லை சார்த்தி வைத்த அம்பு தங்கும் அகன்ற வீடுகளையும், ஊகம் புல்லால் வேயப்பட்ட உயர்ந்த நிலையுள்ள மதில், மலையிலுள்ள தேன் கூடு போன்ற குதையையுடைய அம்புக்கட்டு,துடிகள் தொங்கும் வலிய காலையுடைய பந்தர், சங்கிலியால் நாய்கள் கட்டி வைக்கப்பட்ட காவலையுடைய வீடுகள், உயிர்ப்புள்ள முள் வேலியையும் அதனை சூழ்ந்த காவற்காட்டையும் உடைய பக்கம், உருண்ட கணைய மரம் இட்ட இணைக்கப்பட்ட கதவு, செவ்வனே நிற்கும் நெடிய முனையையுடைய வலிய கனுக்கள் நிரைக்கப்பெற்ற ஊர்வாயில் ஆகியவைகளை உடையது கொடிய வில்லையுடைய எயினர்களின் காட்டரண். அத்தகைய அரணில் நீங்கள் தங்குவீராயின், களர் நிலத்தில் விளையும் தன்மையுடைய ஈச்ச மரத்தின் விதைபோன்ற, மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த அவிழாகிய அரிசிச்சோற்றை, வேட்டை நாய்கள் கவ்விக் கொண்டு வந்த அக்குமணி போன்ற முட்டையுடைய உடும்பின் பொரியலால் மறைத்ததனை அவர்களின் வீடுகள்தோறும் பெருவீர்!..]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
பகுதி 8 - ல் எயினர்களின் வாழ்விடங்களாக 'குரம்பை' பற்றி பார்த்தோம். அதேபோன்று பகுதி 9 மற்றும் 10 - ல் அவர்களின் உணவாகிய புல்லரிசிச்சோறு மற்றும் கருவாட்டுத் துண்டு ஆகிய விபரங்கள் பெறப்பட்டது. பகுதி 11 - ல் காட்டிலுள்ள கானவர்கள் அதாவது வேட்டுவர்கள் குறுமுயல் வேட்டையாடி கூட்டுணவு கொள்ளும் வாழ்க்கை முறை விளக்கப்பட்டது. ஆனால், இந்தப் பகுதியில்(12) (காட்டு) அரணில் வாழ்பவர்களின் அரண் அமைப்பு, அவர்களிடமிருந்து கிடைக்கும் அரிசிச்சோறு மற்றும் வேட்டையாடிய உடும்புக்கறி ஆகிய விபரங்கள் பெறப்படுகிறது. இதில் பகுதி 8,9 மற்றும் 10 ஒரு வகையாகவும், பகுதி 11 ஒரு வகையாகவும், இந்த 12 ஆம் பகுதி ஒரு வகையாகவும் கொண்டு ஆய்வோமாயின் ஒரே பிரிவினர் அதாவது எயினர் அல்லது வேட்டுவர் என்போரின் மூன்று விதமான வாழ்க்கை முறை பெறப்படுகிறது. அந்த வகையில் இந்த மூவரும் ஒருவர்தானா அல்லது வெவ்வேறு வகையினரா என்ற குழப்பம் தோன்றுவது இயற்கை. எனவே, இது ஆய்வுக்குரியது. இதில் மூன்றாவதாக காட்டப்பட்ட வகையினரின் வாழ்க்கை முறை முந்தைய இரண்டு வகையினரை விட மேம்பட்ட வளர்ச்சியில் இருக்கிறது. ஏனென்றால், இவர்களின் உணவாக அரிசிச்சோறும், வாழ்விடமோ பாதுகாக்கப்பட்ட 'அரண்' ஆகவும் உள்ளது. அதாவது, 'காட்டரண்'. இந்தக் காட்டரண் என்பது வேந்தர்களின் காட்டுப்படையை சார்ந்த வீரர்களின் அதாவது குறும்படை வீரர்களின் அமைவிடமாக இருக்கலாம். அதை சுட்டும் சொல்தான் 'எயினக் குறும்பு' அதாவது, குறும்பரண் அல்லது காட்டரண். எனவே, 'வேந்துவிடு தொழில்' மூலம் இவர்கள் மற்றைய இரு பிரிவினரைப் போல் அல்லாமல் நெல்லரிசி பெறுவதற்கான வாய்ப்புப் பெற்று மேம்பட்ட வளர்ச்சி கொண்டவர்களாக நாம் கருத முடியும்.இதை உறுதிபடுத்தும் செய்திகள் மற்றைய இலக்கியங்களிலும் காணப்படுகிறது. அதை பின்பு பார்க்கலாம்.

பெரும்பாணாற்றுப்படை 11

பாலை நிலக் கானவர்களின் (வேட்டுவர்களின்) வேட்டை
பாடல் வரிகள்:
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்
வான் மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி
புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்
அரை நாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கி
தொகுவாய் வேலித் தொடர் வலை மாட்டி
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையம்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்குஅற வளைஇ
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சுரம் இறந்த அம்பர்............................ (106-117) 


விளக்கம்:
[.....மானின் அடிச்சுவடு பொருந்தியுள்ள மயக்கம் ஏற்படுத்தக்கூடிய பாதையின் பக்கத்தில்,மழை பெய்யாது தவிர்த்த காலத்தில்,நீரை விரும்பித் தோண்டிய பள்ளங்களை சூழ்ந்த,மூடுகுழிகளின் உள்ளே மறைந்து ஒதுங்கி,அகத்திப் பூவைப் போன்ற வளைந்த கொம்பையுடைய பன்றி நீர் உண்ண வரும் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நடு யாமத்து வேட்டை ஆடாது ஒழிந்தால், பின் மறுநாள் பகற்பொழுதில் திறந்த வாயையுடைய வேட்டை நாயுடன்,பசுமையான புதர்களை அடித்து அடர்ந்த இடத்தையுடைய வேலியிடத்தில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட வலைகளைக் கட்டி,முள்ளுடன் கூடிய தண்டையுடைய தாமரை மலரின் மெல்லிய புற இதழ்களைப் போன்ற நீண்ட காதுகளையுடைய குறுமுயல்களை ஓடிவிடாதபடி வளைத்துப்பிடித்து கொடிய பார்வைை கொண்ட (காட்டில் வாழும்) வேட்டுவர்கள்,அக்காட்டில் கூடி கூட்டுணவு உண்ணும் அரிய பாலை நிலத்திற்கு அப்பால் கடந்து...]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறியும் செய்தி:
கொடிய பாலைநிலத்தில் வாழும் கானவர்களின்( வேட்டுவர்களின்) தொழில் வேட்டையாடுதல்.அந்த வேட்டை மூலம் கிடைக்கும் வேட்டைப் பொருள்களை காட்டின் ஓரிடத்தில் ஒன்றாக கூடி கூட்டுணவு கொண்டனர்.அதாவது,இவர்களுக்கென்று தனிக் குடும்ப அமைப்பு இல்லை.அனைவரும் கூடி கூட்டு வாழ்வு வாழ்ந்தனர் என்ற செய்தி பெறப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை 10

எயிற்றியர் அளிக்கும் உணவு
பாடல் வரிகள்:
பார்வை யாத்த பறை தாள் விளவின்
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்
வாடாத் தும்பை வயவர் பெருமகன்
ஓடாத் தானை ஒண் தொழிற் கழற்கால்
செவ்வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கு இலைக் குவைஇ நும்
பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்........(95-105)


விளக்கம்:
[...வீட்டிற்கு முன்பாக பார்வை மான் கட்டப்பட்டதால் தேய்ந்த அடியுடைய விளாமரத்தின் நிழலில் தோண்டப்பட்ட நில உரலில்,சிறிய வலிய உலக்கையால் புல்லரிசியைக் குத்தி, ஆழமான கிணற்றின் சிறிய ஊற்றிலிருந்து முகந்து கொண்டு வரப்பட்ட உப்பு நீரைக்கொண்டு,பழைய விளிம்பு உடைந்த பானையில் இட்டு,உடைந்த அடுப்பை ஏற்றி, அறியாத கருவாட்டுத் துண்டுடன் சமைத்த சோற்றை,'நாங்கள் வாடாத தும்பை மாலை அணிந்த வீரர்கள் கொண்ட முறமுதுகிட்டு ஓடாத படையுடைய வீரக்கழல் அணிந்த செம்மையான மலை நாடன் இளந்திரையனை இரந்து போற்றும் பாணர் சாதியினர்' என்று சொல்வீராயின்! அவர்களால் தெய்வத்திற்கு இடப்பட்ட பலிபோல்,மிக்க பசியுடைய உங்களது சுற்றத்தாருடன் தேக்கு இலையில் மிகப் பெறுவீர்!(அந்த உணவை)..]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
புல்லரிசி,வாயுடைந்த பானை,உடைந்த அடுப்பு,பார்வை மான், உப்பு நீர் ஊற்று ஆகியவை மூலம் எயிற்றியரின் ஏழ்மைத்தனமும்,அவர்கள் குடிசை அமைக்கப்பட்ட நில அமைப்பும் தெளிவாகிறது.இதைத் தவிர்த்து இவர்கள் தம்மை ஆளும் மன்னனைப் போற்றி அவனால் புரக்கப்பட்டவர்களுக்கு விருந்தோம்பலில் விருப்பம் கொண்டவர்கள் என்ற செய்தியும் பெறப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை 9

எயிற்றியர் புல்லரிசி எடுத்தல்
பாடல் வரிகள்:
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன் பிணவு ஒழியப் போகி நோன் காழ்
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழுக்கோல்
உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
இருநிலக் கரம்பைப் படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்........(89-94)


விளக்கம்:
[...மான் தோலான படுக்கையிலே அண்மையில் குழந்தை பெற்ற எயினர் மகளிர் குழந்தையோடு முடங்கிக் கிடக்க,மற்ற மகளிர் சென்று தலையில் பூணை இடப்பட்ட திரண்ட கோலையுடைய உளி போன்ற கூர்மையான பாரையால் கரம்பை நிலத்தில் குத்தி அதன் மண் மேலும் கீழும் ஆகுமாறு செய்து புழுதியை ஒதுக்கிவிட்டு அதிலுள்ள மென்மையான புல்லரிசியை வெண்மையான பற்களைக் கொண்ட எயினர் மகளிர் வாரி எடுப்பர்..]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
இதில் எயினர்களின் உணவுப் பொருளாக எரும்புகள் சேர்த்து வைத்த 'புல்லரிசி' என்பது தெளிவாகிறது.இதில் 'பள்ளி' என்பது பற்றிக் குறிப்பிடும்போது அதை பள்ளிச்சாதி என்பதாக 'மள்ளரியத் தந்தை' ஐயா தேவ ஆசிர்வாதம் அவர்கள் அவரது நூலில் குறிப்பிட்டிருப்பார்கள்.ஆனால்,அது 'பள்ளி' என்ற சாதி பற்றியது அல்ல 'படுக்கை' என்பதே சரியான விளக்கம்.

பெரும்பாணாற்றுப்படை 8

எயிற்றியர் குடிசை
பாடல் வரிகள்:
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசுங்காய் புடை விரிந்தன்ன
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது
யாற்று அறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்
ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை.......(83-88) 


விளக்கம்:
[...நீண்ட அடிப்பகுதியுடைய இலவம் மரத்தின் அசையும் கொம்பு காய்த்த பஞ்சையுடைய அழகிய பசுங்காய் முதுகுப் புறத்தில் விரிந்து தோன்றியது போல்,முதுகுப் புறத்தில் வரிகள் கொண்ட அணிலோடு எலிகள் திரியாது, ஆற்றின் மணலையொத்த மேற்புறம் செழுமையான மடலையுடைய,வேலின் முனையையொத்த கூர்மையான முனையுடைய, நெடிய மேட்டு நிலத்தில் ஈச்ச இலைகளால் வேயப்பட்ட முள்ளம் பன்றியின் முதுகையொத்த (எயினர்களின்) குடிசை...]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
எயினர்களின் குடிசையானது நெடிய மேட்டு நிலப்பகுதியில் ஈச்ச இலைகளால் வேயப்பட்டு முள்ளம்பன்றியின் முதுகைப் போன்ற தோற்றம் உடையது.அந்தக் குடிசைப் பகுதியில் அணில் மற்றும் எலிகள் திரியாது என்று குறிப்பிடப்படுவதால் அவைகளை எயினர்கள் வேட்டையாடினர் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை 7

சாத்து செல்லும் வழிகளைக் காத்தல்
பாடல் வரிகள்:
எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்
அரும்பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடிபுதை அரணம் எய்தி படம்புக்கு
பொரு கணை தொலைச்சிய புண்தீர் மார்பின்
விரவு வரிக் கச்சின் வெண்கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவுஉடை
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள்
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்
தடவு நிலைப் பலவின் முழு முதற் கொண்ட
சிறு சுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்..........(66-82)

விளக்கம்:
[...பகற்பொழுதில் போவோர்க்கு இளைப்புத் தீர, மலையிலுள்ளதும், கடலிலுள்ளதும் ஆகிய சிறந்த பயனைக் கொடுத்து அறிய பொருளைப் பெற்று உலகத்தார் அனுபவிக்க விரும்பம் கொள்ளும்,திருந்திய தொடையின் வலிமையான காலில் பாதங்களை மறைக்கும் காலணி அணிந்து, சட்டையிட்டு, ஆறலைப்போர் எய்த அம்புகளால் உண்டான புண்கள் இல்லாத மார்பினர். மலையில் ஊரும் பாம்பைப் போன்று பூணப்பட்டு ஒரு பக்கத்தில் தொங்கும் உடைவாள் செருகப்பட்ட சற்று வீங்கிய இறுகக் கட்டப்பட்ட உடையையும், வில் அகற்றிய இடம் அகன்ற வலியையுடைய தோளினர்.கடம்ப மரத்தில் வீற்றிருக்கும் நெடிய வேலுடைய முருகனைப் போன்ற பெரிய கைகளை உடைய தோற்று ஓடாத வழிப்போக்கர் அதாவது சாத்துவர்கள்.வளைந்த கிளைகொண்ட பலா மரத்தின் குலை தள்ளிய பருத்த அடிமரம் கொண்ட சிறிய சுளைகள் அடங்கிய பெரிய பழம் போன்ற மிளகினை ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய வடு அழுத்திய வலியையுடைய முதுகினையும்,நிமிர்ந்த காதுகளையும் உடைய கழுதை கொண்டு செல்கின்ற, சாத்துக்கள் போகும் சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில், வழியைப் பாதுகாக்கின்ற விற்படை காவல் பொருந்திய ஊர்களையுடையதான தன்மையுடைய அகன்ற காட்டு வழியில்..]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
செல்லும் வழிகளில் ஆறலைப்பவர்களின் தாக்குதல்களிலிருந்து வணிகப்பொருளைப் பாதுகாக்க வணிகக் கூட்டத்தார் ஒரு போர் வீரனுக்குறிய வீரத்துடன் செயல்பட்டனர்.'வம்பலர்' என்பதற்கு வழிப்போக்கர் அல்லது வணிகக் கூட்டத்தார்(சாத்துக்கள்) என்ற கூடுதல் அர்த்தமும் பெறப்படுகிறது.அதேபோன்று, "தடவு" என்ற சொல்லுக்கு 'வளைந்து ஒடுங்கிய பகுதி' என்ற தெளிவாக்கமும் பெறப்படுகிறது.சாத்துக்கள் செல்லும் பெரு வழிகளில் விற்படை ஏந்திய காவல் பொருந்திய ஊர்கள் இருப்பதும், சுங்கம் கொள்ளும் சுங்கச்சாலை இருப்பதும் தெரிய வருகிறது.

பெரும்பாணாற்றுப்படை 6

உப்பு வணிகர் செல்லும் நெடிய வழி
கொழுஞ்சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழுமர உருளி
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன் பார்
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்
முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து
காடி வைத்த கலனுடை மூக்கின்
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலைக் கண்ணிப் பருஏர் எறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
சிறு துளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப
சில்பத உணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி...... (46-65)

விளக்கம்:

உப்பு வண்டியின் தோற்றம்:
விளிம்பை சூழ்ந்த வட்டையில் பொருந்திய,ஆரக்கால் சரியாகப் பொருத்தப்பட்ட மத்தளம் போன்ற முழுமையான மரத்தால் குடைந்த குடத்தையும்,இரு கணைய மரங்களை இணைத்தார் போன்ற பருத்த வலிய இணைப்புக் கட்டையையும்,மலையானது மழைக்காலத்தில் மேகக் கூட்டங்களை சுமந்தது போன்ற புற்கள் வேய்ந்த கூட்டையுடைய, பாதை வழியே ஊடறுத்து செல்லும் வண்டி. யானை பயிரைத் தின்னாமல் காப்போர் கட்டிய குடில் போன்று சிறிதாகக் கட்டிய கோழி கிடக்கும் கூட்டையுடைய குடில்.அதன் வாயிலில் மூங்கில் முளை போன்ற கொம்புடைய கரிய பெண்யானையின் முழந்தாளைப் போன்று துளை கொண்ட சிறிய உரல் கட்டி அசையும்படி வைக்கப்பட்டுள்ளது. நாட்டியமாடும் நாட்டிய மகளிர் (கூத்தியர்) ஆடுகளத்தில் கொண்டு வந்த நன்கு இழுத்துக் கட்டப்பட்ட மத்தளம் போன்ற இசைக்கருவியைப் போல் கயிரால் கட்டப்பட்ட ஊறுகாய்ப் பானை தொங்கும் நுகத்தின்கண் அமர்ந்து உமண் மகளிர் எருதுகளின் பின்பகுதியில் அடித்து வண்டியை செலுத்துவர்.

உமணரின் தோற்றம்:
கிளையில் பூங்கொத்தையுடைய வேப்ப மரத்தின் மேன்மையுடைய இலைகளால் பின்னப்பட்ட தழை கலந்து கட்டப்பட்ட மாலையையும், பருத்த வலுவுடைய தோளையும்,முறுக்கலடைந்த உடலையும் உடைய, சிறிய துளையுடை வளைவான நுகத்திடை எருதுகள் ஒரு வரிசையில் நேராக இருக்குமாறு பிணைக்கப்பட்ட பெருங்கயிற்றைப் கையில் பிடித்து வண்டியை ஒழுங்குபடுத்தி பக்கத்தில் காத்து, உணவில் இடப்படும் உப்பின் விலை சொல்லி ஊர்கள் தோறும் பெரும் சாலை வழியே பல எருதுகளுடைய உப்பு வணிகர் செல்வர்.

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறியும் செய்தி:
ஊர்கள் தோறும் சென்று உப்பு வணிகம் செய்யும் உப்பு வணிகர்கள் அதாவது உமணர்கள் 'வேப்ப இலையால் பிண்ணப்பட்ட தழைகள் கலந்த மாலை அணிந்திருப்பர்' என்று சொல்லப்படுகிறது.வேப்ப மாலைக்கு உரியவர்கள் 'பாண்டியர்கள்' இங்கே மேன்மையான வேப்ப இலை பிண்ணப்பட்ட மாலையை உப்பு வணிகர்கள் அணிகிறார்கள் என்றால் அவர்கள் பாண்டிய வம்சத்தவர் என்பதைக் குறிக்கவா? அல்லது அவர்கள் உப்பளம் மிகுந்த பாண்டிய நாட்டை சார்ந்த உப்பு வணிகர்கள் என்பதைக் குறிக்கவா? இந்த செய்தி ஆராயத்தக்கது.

பெரும்பாணாற்றுப்படை 5

தொண்டைமான் ஆட்சி சிறப்பு
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக்
கொடியோர் இன்று அவன் கடியுடை வியன் புலம்
உருமும் உரறாது அரவும் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா
வேட்டு ஆங்கு அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கி
சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம் .............(39-45)


விளக்கம்:
[....(இளந்திரையன் நாட்டின் வழி செல்லும்) வழிப்போக்கர்களை அலறப்புடைத்து அவர்தம் பொருளைக் கொள்ளை கொள்ளும் கொடியவர்கள் இல்லாத பாதுகாப்புடையது அவனது அகன்ற நாடு. இடியும் தாக்காது, பாம்பும் தீண்டாது காட்டிலுள்ள புலிகள் போன்ற விலங்கினங்களும் தொல்லை தராது.ஆதலால் நீ களைப்பு வரும்போது களப்பாறி,விரும்பிய இடத்தில் தங்கி நின் உள்ளம் சிறப்புற செல்வாயாக இரத்தலில் வல்லவனே!.....]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறியும் செய்தி:
வழிப்போக்கர்களைத் தாக்கி அவர்கள் பொருளைக் கொள்ளை கொள்வதைத் தொழிலாகக் கொண்ட கொடியவர்கள் 'களவு ஏர் வாழ்க்கை செய்வோர்' அதாவது கள்வர்கள். அத்தகையோர் இல்லாத பாதுகாப்பானது இளந்திரையனின் நாடு. அடுத்ததாக 'இரந்து பெற்று வாழும் தொழிலில் வல்லவர்கள் பாணர்கள்' என்ற செய்தி உறுதிபடுத்தப்படுகிறது.

பெரும்பாணாற்றுப்படை 4

இளந்திரையனின் சிறப்பு
….. …. ………. நீயிரும்
இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த்
திரை தரு மரபின் உரவோன் உம்பல்
மலர்தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்
பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்........(28-38)


விளக்கம்:
[ ....நீ கூட , பெரிய இந்த நிலப்பரப்பைத் தன் காலடியால் அளந்தவனும், திருமகளைத் தன் மார்பில் நிறுத்திய கடலின் நீல நிறத்தைக் கொண்டவனுமாகிய திருமாலின் (இராமனின் வம்சம், அதாவது சோழர்கள்) வழித்தோன்றலும், கடல் அலை வழி வந்த மரபினனுமான, இந்தப் பரந்த உலகத்திலுள்ள உயிர்களையெல்லாம் காக்கும் முரசு முழங்குகின்ற படையுடைய மூவேந்தரிடத்திலும் நீரையுடைய கடலில் தோன்றும் சங்குகளில் புகழ் வாய்ந்த வலம்புரிச்சங்கைப் போன்று விளங்கும்,மறத்தை ஒழித்து அறத்தைக் காக்கும் செங்கோலை உடையவனும், பல வேல்படைகளை உடையவனுமாகிய (தொண்டைமான்) இளந்திரையனிடம் செல்ல விரும்புவீர் எனில் நான் அவன் இயல்பைச் சொல்வேன். அதைக் கேட்டவுடன் உமது மனக் கவலையெல்லாம் அகலும்!....]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
தொண்டைமான் இளந்திரையன் இராமனின் மரபினராகிய சோழரின் குடிப்பிறந்த, கடல் அலையால் கொண்டு வரப்பட்டவன் (அதாவது, நாகக்கன்னிக்கும்,சோழ மன்னனுக்கும் பிறந்தவன்) என்ற செய்தி பெறப்படுகிறது. அறத்திற்கு எதிரான செயலை ஒழித்து அறம் வளர்ப்பது நாட்டை ஆளும் தமிழ் மன்னர்களின் செங்கோல் தன்மை என்ற விசயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாணாற்றுப்படை 3

ஆற்றுப்படுத்துவோன் தன் செல்வ நிலையை எடுத்துரைத்தல்
பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும்பேர் ஒக்கலொடு
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி
வால் உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு
யாம் அவணின்றும் வருதும்........ (23-28)


விளக்கம்:
[....பஞ்சத்தால் பெரும்வறட்சியுற்ற காட்டில்,இடி மின்னலுடன் வானம் மழையைப் பொழிந்தது போன்று,நெடுநாளைய பசியால் வருந்திய எனது மிகப் பெரும் சுற்றத்தாரோடு மற்றவருக்குக் கொடுக்க குறைவில்லாத பெரும்செல்வத்தைப் பெற்று, வெள்ளைப் பிடரியுள்ள குதிரை அதோடு சேர்த்து வலிய யானையையும் பெற்றுக் கொண்டு மன்னன் இளந்திரையனின் இடத்திலிருந்து யாம் வருகிறோம்!.....]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
வருமையால் வருந்திய ஒரு பாணன் தொண்டைமான் இளந்திரையனைக் கண்டு பாடி பல பரிசுகள் பெற்று திரும்புகின்ற வழியில் சந்தித்த மற்றொரு பாணனிடம் "நீயும் அந்த மன்னனிடம் சென்றால் இது போன்ற பல பரிசுகளைப் பெறுவாய்!" என்று கூறி ஆற்றுப்படுத்துவதை தெளிவாக்குகிறது.

பெரும்பாணாற்றுப்படை 2

பாணனின் இயல்பு
வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண ............. (17-22)


விளக்கம்:
[ ...இடப்பக்கத்தில் யாழைத் தழுவி.........வெப்பத்தை உமிழ்கின்ற ஞாயிறோடு திங்களும் வலம் வருகின்ற, குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில், நின்னைப் புரப்பவரைப் பெறாமல், மழை பொழிவில்லாததால் நிலத்திலிருந்து மேலெழுந்த ஆவி சூழ்ந்த மலையில் பழம் பழுத்த மரம் தேடி அலைகின்ற பறவைபோல், மிகுந்த பசியால் அழுகின்ற சுற்றத்தாரோடு அங்குமிங்கும் பயனின்றி அலைந்து திரியும், வறுமை காரணமாக உடல் மெலிவுற்று பொலிவிழ்ந்த, தான் கற்ற கல்வியை வெறுத்துக் கூறும் வாயையுடைய பாணன்...]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்வது:
சங்க காலத்தில் வாழ்ந்த பெரும்பாணர்கள் 'பா' இயற்றி வேந்தர்களைப் பாடி பரிசு பெற்று அதன் மூலம் தன் சுற்றத்தாரோடு வாழ்ந்து வந்தனர்.எனவே,அவர்கள் வாழ்வு மிகுந்த வறுமைமிக்க வாழ்வாகவே இருந்தது. வறுமை மிகுதியால் ஆற்றாமையில் அவர்கள் தாம் பெற்ற கல்வியை அடிக்கடி பழித்துப் பேசும் தன்மையுடையவராகவும் இருந்தனர். அதுமட்டுமல்லாமல்,அவர்களின் வாழ்க்கை ஓரிடத்தில் நிலைத்து வாழும் வாழ்வாக இல்லாமல் அலைந்து திரியும் நாடோடி வாழ்வாகவே இருந்தது.

பெரும்பாணாற்றுப்படை1

பெரும்பாணாற்றுப்படை1(1). பேரியாழின் வருணனை
எழுதியவர்: உருத்திரங் கண்ணனார்
1. அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி


விளக்கம்:
[அகன்ற பரந்த வானத்தே பரவிய இருளைப்போக்கி, பகற்பொழுதைத் தோற்றுவித்து எழுகின்ற பல கதிர்களையுடைய கதிரவனின் கடுமையான கோபத்தால் சுட்டெரிக்கின்ற முதுவேனிற் காலத்தே,பச்சை இலைகளை உதிர்த்த பருத்த அடியுடைய பாதிரி மர............]


பெரும்பாணாற்றுப்படை 1(2). பேரியாழின் வருணனை....தொடர்ச்சி
வள் இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை
பரியரைக் கமுகின் பாளைஅம் பசும்பூக்
கரு இருந்தன்ன கண்கூடு செறி துளை
உருக்கி யன்ன பொருத்துறு போர்வை (10)


விளக்கம்:
[....பருத்த அடியுடைய பாதிரி மரமானது......பெரிய இதழையுடைய வண்டுகள் மொய்க்கின்ற பூவின் கிழிக்கப்பட்ட உட்புறத்தை ஒத்து விளங்கும் நிறமூட்டப்பட்ட தோலினாலாகிய பருத்த அடியுடைய பாக்கு மரத்தினது பாளையாகிய அழகு பொருந்திய பசிய பூ விரியாமல் கருவாய் இருந்தாற்போன்று இரண்டு கண்ணும் கூடிய செறிந்த துளையினையும்,உருக்கி ஒன்றாக வார்த்ததைப் போல் தோல்களின் வேறுபாடு தெரியாமல் இசைக்கப்படும் போர்வையினையும்.....]


பெரும்பாணாற்றுப்படை 1(3). பேரியாழின் வருணனை....தொடர்ச்சி
சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறுவாய்
பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்தன்ன மாஇரு மருப்பின்
பொன் வார்ந்தன்ன புரிஅடங்கு நரம்பின்
தொடை அமை கேள்வி இடவயின் தழீஇ (16)


விளக்கம்:
[....போர்வையினையும்.....சுனை வற்றியதால் உள்நாக்கு இல்லாதுபோன்று இருண்டு தோன்றும் சுனை வாயினையும்,முதற் பிறை பிறந்து ஏந்தியிருந்தார் போன்ற பின்பு ஏந்தியிருக்கின்ற கவைத்தலையுடைய கடையினையும், நெடிய மூங்கிலையொத்த திரண்ட தோளினையுடைய மகளிரின் முன்கை வளையல்போன்று நெகிழவேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும் இறுக வேண்டிய இடத்தில் இறுகியும் உள்ள வார்க்கட்டு,நீலமணி ஒழுகினாலொத்த கருமையான பெரிய தண்டினையுமுடைய பொன் கம்பியாய் ஒழுகினாலொத்த முறுக்கின நரம்பினால் கட்டப்பட்ட யாழை இடப்பக்கத்தில் தழுவி]
வரி (1 - 16) - பெரும்பாணன் இடப்பக்கத்தில் வைத்திருந்த பேரியாழின் வருணனை விளக்கப்பட்டது....]