Tuesday, 10 January 2017

பெரும்பாணாற்றுப்படை 12

எயினரது அரணின் அமைப்பு
பாடல் வரிகள்:
…… ……….. ………. பருந்து பட
ஒன்னாத் தெவ்வர் நடுங்க ஓச்சி
வைந்நுதி மழுங்கிய புலவுவாய் எஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ முடிநாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு
கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்
தொடர் நாய் யாத்த துன்அருங் கடிநகர்
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செந்நிலை
நெடு நுதி வயக்கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன
சுவல் விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூல் உடும்பின்
வறைகால் யாத்தது வயின் தொறும் பெருகுவிர்..........(117-133)

விளக்கம்:
[....ஊனைத் தின்பதற்குப் பருந்துகள் வந்து தங்குமாறு பொருந்தாத பகைவரைக் குத்திக் கூரிய முனை மழுங்கிய புலால் நாறும் வாயையுடைய வேலினை, தெளிந்த ஓசையுள்ள மணி கட்டிய பலகையுடன் வரிசைப்பட வைத்து, தலையில் முடிந்த நாணையுடைய வில்லை சார்த்தி வைத்த அம்பு தங்கும் அகன்ற வீடுகளையும், ஊகம் புல்லால் வேயப்பட்ட உயர்ந்த நிலையுள்ள மதில், மலையிலுள்ள தேன் கூடு போன்ற குதையையுடைய அம்புக்கட்டு,துடிகள் தொங்கும் வலிய காலையுடைய பந்தர், சங்கிலியால் நாய்கள் கட்டி வைக்கப்பட்ட காவலையுடைய வீடுகள், உயிர்ப்புள்ள முள் வேலியையும் அதனை சூழ்ந்த காவற்காட்டையும் உடைய பக்கம், உருண்ட கணைய மரம் இட்ட இணைக்கப்பட்ட கதவு, செவ்வனே நிற்கும் நெடிய முனையையுடைய வலிய கனுக்கள் நிரைக்கப்பெற்ற ஊர்வாயில் ஆகியவைகளை உடையது கொடிய வில்லையுடைய எயினர்களின் காட்டரண். அத்தகைய அரணில் நீங்கள் தங்குவீராயின், களர் நிலத்தில் விளையும் தன்மையுடைய ஈச்ச மரத்தின் விதைபோன்ற, மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த அவிழாகிய அரிசிச்சோற்றை, வேட்டை நாய்கள் கவ்விக் கொண்டு வந்த அக்குமணி போன்ற முட்டையுடைய உடும்பின் பொரியலால் மறைத்ததனை அவர்களின் வீடுகள்தோறும் பெருவீர்!..]

இந்தப் பாடல் வரிகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி:
பகுதி 8 - ல் எயினர்களின் வாழ்விடங்களாக 'குரம்பை' பற்றி பார்த்தோம். அதேபோன்று பகுதி 9 மற்றும் 10 - ல் அவர்களின் உணவாகிய புல்லரிசிச்சோறு மற்றும் கருவாட்டுத் துண்டு ஆகிய விபரங்கள் பெறப்பட்டது. பகுதி 11 - ல் காட்டிலுள்ள கானவர்கள் அதாவது வேட்டுவர்கள் குறுமுயல் வேட்டையாடி கூட்டுணவு கொள்ளும் வாழ்க்கை முறை விளக்கப்பட்டது. ஆனால், இந்தப் பகுதியில்(12) (காட்டு) அரணில் வாழ்பவர்களின் அரண் அமைப்பு, அவர்களிடமிருந்து கிடைக்கும் அரிசிச்சோறு மற்றும் வேட்டையாடிய உடும்புக்கறி ஆகிய விபரங்கள் பெறப்படுகிறது. இதில் பகுதி 8,9 மற்றும் 10 ஒரு வகையாகவும், பகுதி 11 ஒரு வகையாகவும், இந்த 12 ஆம் பகுதி ஒரு வகையாகவும் கொண்டு ஆய்வோமாயின் ஒரே பிரிவினர் அதாவது எயினர் அல்லது வேட்டுவர் என்போரின் மூன்று விதமான வாழ்க்கை முறை பெறப்படுகிறது. அந்த வகையில் இந்த மூவரும் ஒருவர்தானா அல்லது வெவ்வேறு வகையினரா என்ற குழப்பம் தோன்றுவது இயற்கை. எனவே, இது ஆய்வுக்குரியது. இதில் மூன்றாவதாக காட்டப்பட்ட வகையினரின் வாழ்க்கை முறை முந்தைய இரண்டு வகையினரை விட மேம்பட்ட வளர்ச்சியில் இருக்கிறது. ஏனென்றால், இவர்களின் உணவாக அரிசிச்சோறும், வாழ்விடமோ பாதுகாக்கப்பட்ட 'அரண்' ஆகவும் உள்ளது. அதாவது, 'காட்டரண்'. இந்தக் காட்டரண் என்பது வேந்தர்களின் காட்டுப்படையை சார்ந்த வீரர்களின் அதாவது குறும்படை வீரர்களின் அமைவிடமாக இருக்கலாம். அதை சுட்டும் சொல்தான் 'எயினக் குறும்பு' அதாவது, குறும்பரண் அல்லது காட்டரண். எனவே, 'வேந்துவிடு தொழில்' மூலம் இவர்கள் மற்றைய இரு பிரிவினரைப் போல் அல்லாமல் நெல்லரிசி பெறுவதற்கான வாய்ப்புப் பெற்று மேம்பட்ட வளர்ச்சி கொண்டவர்களாக நாம் கருத முடியும்.இதை உறுதிபடுத்தும் செய்திகள் மற்றைய இலக்கியங்களிலும் காணப்படுகிறது. அதை பின்பு பார்க்கலாம்.

No comments:

Post a Comment